Monday, July 7, 2014

சாத்தூருக்குப் பெருமை சேர்க்கும் சேவு


பாரதியார் வீரப் பலகாரங்கள் என ஒரு பட்டியல் போடுகிறார். அதாவது சாப்பிடுவதற்குக் ‘கரமுறகரமுற’ என இருக்கும் முறுக்கு, வறுவல்(சீவல்), சேவு போன்ற இந்தப் பலகாரங்களைச் சாப்பிட்டால் ஓர் உற்சாகம் பிறக்கும். இம்மாதிரியான பலகாரங்களுக்கு அவர் வேடிக்கையாக ‘வீரப் பலகாரம்’ எனச் சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்.
இந்த வீரப் பலகாரத்தில் குறிப்பிடத்தகுந்தது ‘சேவு’. இதை வட தமிழகத்தில் ‘காரசேவு’ என அழைக்கிறார்கள். பொதுவாகத் தென்மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, சேவு, வறுவல் தயாரிப்பில் பெயர் பெற்றவை. கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், விருதுநகர் ஆகிய ஊர்களில் இந்தப் பலகாரங்களைத் தயாரிக்கும் பட்டறைகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனாலும் சேவுக்கெனப் புகழ் பெற்ற ஊர் சாத்தூர்தான்.
சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன்பால் ஈர்த்துவிடும் குணம் கொண்டது சாத்தூர் சேவு. சாத்தூர் பேருந்து நிலையத்திலேயே ‘சாத்தூர் சேவு’ ‘சாத்தூர் சேவு’ என ஒலிக்கும் வியாபாரிகள் சத்தம் சாத்தூர் சேவின் ருசிக்குச் சான்றாகும். சாத்தூர் இந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கக் காரணம் சண்முக நாடார் மிட்டாய்க் கடைதான். சாத்தூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு அருகே ரயில்வே சாலையில் உள்ளது நூறு வருடம் பழமையான இந்தக் கடை.
இந்தக் கார சேவு, வட இந்தியத் தின்பண்டமான ‘புஜியா’விலிருந்து வந்திருக் கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் புஜியா இன்னும் சிறியதாக இருக்கும். சண்முகவேல்
நாடார் நூறாண்டுகளுக்கு முன்பே இத்தொழிலைச் சாத்தூரில் தொடங்கினார். ஆனால், அப்போது சேவு அல்லாத பலவிதமான தின்பண்டங்களைத் தயாரித்து விற்றுவந்தார். பிறகு சேவு
அந்தப் பகுதியில் பிரபலமாக, அதையும் தயாரித்து விற்றார். சண்முகவேல் நாடாரின் தயாரிப்பு சேவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்க, அது சாத்துருக்கே பெருமை அளிக்கும் விஷயமானது.
சண்முகவேல் நாடாரின் கடைக்கு 1964-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்திருக்கிறார். இன்னும் பல முக்கியஸ்தர்களைச் சண்முக நாடாரது சேவின் சுவை இழுத்து வந்திருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சாத்தூர் சேவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 150 கிலோ வரை சண்முக நாடார் கடையில் சேவு விற்பனையாகிறது. இப்போது இந்தக் கடையைச் சண்முக நாடாரின் மூன்றாம் தலைமுறையினர் நிர்வகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கொடைக்கானலில் இருந்து தருவிக்கப்படும் பூண்டும், தனித்துவமான கைப்பக்குவமும், சுத்தமான பகுதிப் பொட்களும்தான் சண்முக நாடார் கடைச் சேவின் தனி ருசிக்குக் காரணம். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்ப் பொடி, கடலை எண்ணெய், சீரகம், பூண்டு, வெங்காயம், கல் உப்பு ஆகியவைதான் சேவு தயாரிப்பின் பகுதிப் பொருள்களாகும்.
சுத்தமான தண்ணீரில் எடுத்துவைத்துள்ள மிளகாய்ப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, பெருங்காயம் இரண்டையும் அரைத்து விழுதாக்கித்
தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்க் கரைசலுடன் கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். அரைத்து விழுதாக்கப்பட்ட பூண்டு, பெருங்காயக் கலவையை அதனுடன் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையைச் சேவு பிழியும் சாதனத்தில் இட்டு அடுப்பில் கொதிக்கவைக்கப்பட்ட கடலை எண்ணெயில் மாவைக் குச்சி குச்சியாகப் பிழிய வேண்டும். பிறகு அதைப் பக்குவமாக வேகவிட்டு எடுத்தால் மொறு மொறுயான சேவு தயார்!

Thursday, July 3, 2014

இந்துக்களின் சம்பிரதாயம்

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஞ்ஞான காரணங்கள்!
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால், அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

பொதுவாகவே மூட நம்பிக்கைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது இந்து மதம். ஆனால் உண்மை மிகவும் அப்பாற்ப்பட்டது இது. இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான மதங்களில் ஒன்றாகும். அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண காரியத் தொடர்புடைய விஞ்ஞான காரணங்களை அதன் பின் வைத்திருக்கும். ஒவ்வொரு சடங்குகளும் நாம் நலமுடன இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது தனிப்பட்டவரின் செய மேம்பாட்டுக்கும் உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நமஸ்காரம்
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

கோவில் மணிகள்
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.

துளசியை வழிபடுதல்
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

அரசமரம்
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.

காலையில் சூரியனை வழிபடுதல்
காலையில் சூரியனை வழிபடுதல் விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

உணவருந்திய பின் இனிப்பு உண்ணுவது
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
தரையில் அமர்ந்து உண்ணுவது
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்.

Wednesday, July 2, 2014

ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்!'



நடிகர் நாகேஷ் 

தமிழ்ப்பட உலகில் தான் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷா'கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது. 

''காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். 'நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்' என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்'' என்கிறார் நாகேஷ். 

1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார். 

''உண்மையைச் சொல்கிறேன்... எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். 'அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்!' என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார். 

எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா... சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து 'இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே' என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே 'எங்கே இன்பம்?' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..!'' 

அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்'' என்று சொல்லுவாராம். ''பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின. 

எல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ''இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் 'நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்' என்றால், அவன் 'என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா?' என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்'' என்கிறார் அவர். 

''வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். 'கலையைக் காப்பாற்றுகிறேன்' என்று நான் சொல்லத் தயாராக இல்லை. 'கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது' என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்'' என்கிறார். 

மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்களாம். 

நாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை... 'அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்!'