Thursday, October 8, 2015



கெட்டப் பழக்கம்

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி அதைப் பார்த்து, “சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்? என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்” என்றது.
அதை கேட்ட புலி, சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு யானை புகையிலை போட்டுக்கொண்டிருந்ததை அந்த எலி பார்த்தது. இதைத்தொடர்ந்து யானையிடம் சென்ற எலி, “சகோதரா நீ ஏன் இப்படி புகையிலையை உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்” என்றது. இதை கேட்ட யானை புகையிலையைத் தூக்கி எறிந்துவிட்டு எலியுடன் சென்றது.
மூன்று பேரும் நடந்து போகும் பொழுது ஓரிடத்தில் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதைக் கண்ட எலி சிங்கத்திடம் சென்று, “மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் அதைக் காட்டுகிறேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு புலிக்கும் யானைக்கும் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. இருந்தாலும் ஒருவாறு தங்களை சமாளித்துக்கொண்ட அவை சிங்கத்திடம் சென்று, “மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்?” என்று கேட்டன.
அதற்கு சிங்கம், “இந்த பரதேசி, கஞ்சா அடிச்சிட்டு இதைச் சொல்லித்தான் நேத்து என்னை இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். தினமும் இவனுக்கு இதே வேலையாப் போச்சு” என்றது.
நீதி:
சிகரெட், புகையிலை, மது ஆகியவற்றைப் போல கஞ்சாவும் ஒரு கெட்ட பழக்கம்தான். அது உடலைக் கெடுப்பதுடன் சமயத்தில் அடி உதையும் வாங்க வைக்கும்.

யார் புத்திசாலி!

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார்.பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச்  சீர் படுத்த  அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர்  அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்”ஐயா! அறிஞரே!நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது.ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே!தங்கம்,வெள்ளி இவற்றுள்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார்.பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார்”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
 
பையன் சொன்னான்”தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும்,மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டுஎன்னை

அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு 

வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.இது ஓராண்டாக நடக்கிறது.தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது.நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த  விளையாட்டு நின்று விடும்.எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும்.எனவேதான்…”

அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக  வேடம் அணிகிறோம்,மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு.ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!